பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் செல்போனை பாதுகாக்க ரூ.5 கட்டணம்; வருகிற 1-ந்தேதி முதல் அமல்


பழனி முருகன் கோவிலில் பக்தர்களின் செல்போனை பாதுகாக்க ரூ.5 கட்டணம்; வருகிற 1-ந்தேதி முதல் அமல்
x
தினத்தந்தி 19 Sep 2023 9:15 PM GMT (Updated: 19 Sep 2023 9:15 PM GMT)

பழனி முருகன் கோவிலில், பக்தர்களின் செல்போனை பாதுகாக்க வருகிற 1-ந்தேதி முதல் ரூ.5 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல்

பழனி முருகன் கோவிலில், பக்தர்களின் செல்போனை பாதுகாக்க வருகிற 1-ந்தேதி முதல் ரூ.5 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செல்போனுக்கு தடை

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் சிலர், மலைக்கோவிலில் உள்ள மிகவும் அரிதான மூலவர் சிலையை (கருவறையை) புகைப்படம் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.

இதனால் பழனி முருகன் கோவிலில் செல்போன் கொண்டு வர தடை விதிக்க வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கடுமையான கண்டனத்தை தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து பழனி மலை கோவிலுக்கு, அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

இதற்கிடையே பழனி கோவில் சார்பில் அடிவாரம் பாத விநாயகர் கோவில், மின் இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் செல்போன்களை பாதுகாக்க 'ரேக்' அமைக்கும் பணி மும்முரமாக நடந்தது.

ரூ.5 கட்டணம் வசூல்

இந்தநிலையில் பழனி முருகன் கோவில் சார்பில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வருகிற 1-10-2023 முதல் செல்போன், புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் அவ்வாறு கொண்டு வரும் பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் வீடியோ எடுக்கும் சாதனங்களை பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில்களான படிப்பாதை, மின் இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களில் உள்ள பாதுகாப்பு அறையில் ஒரு செல்போனுக்கு தலா ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைத்து விட்டு மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story