பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி..!


பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி..!
x

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

பழனி,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகள் முடிந்த பின்பும் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் கும்பாபிஷேகத்துக்கான பாலாலய பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2 ஆண்டுகளாக திருப்பணிகளில் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் அறங்காவலர் குழு சார்பில், வருகிற ஜனவரி 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக கோவிலில் உள்ள கோபுரங்கள், மண்டபங்கள் ஆகியவற்றை சுத்தப்படுத்தி வர்ணம் பூசும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. அதேபோல் கோவில் பகுதியில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை அமைப்பதற்கான பணி முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து வருகிற ஜனவரி 18-ந்தேதி கணபதி பூஜையுடன் பூர்வாங்க பூஜைகள் நடைபெறுகிறது. 26-ந்தேதி பழனி கோவிலில் உள்ள அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 27-ந்தேதி பழனி முருகன் கோவில் ராஜகோபுரம், தங்க விமானத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக திருப்பணிகளை கோவில் அலுவலர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.


Next Story