'அம்ரித் பாரத்' திட்டத்தில் புதுப்பொலிவு பெறும் பழனி ரெயில் நிலையம்
‘அம்ரித் பாரத்' திட்டத்தில் பழனி ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளதாக ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பழனி ரெயில் நிலையம் வழியாக கோவை, பாலக்காடு, திருச்செந்தூர், திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ரெயில்கள் சென்ற வருகின்றன. இந்த ரெயில்களில் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பயணிகள் என ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரெயில் மூலம் பழனிக்கு வருகை தருகிறார்கள். அந்த சமயங்களில் மதுரை, ராமேசுவரம், கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வளவு முக்கியத்தும் பெற்ற பழனி ரெயில்நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் சிறப்பு சேவைகள் செய்து தர வேண்டும் என பக்தர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மத்திய அரசின் 'அம்ரித் பாரத்' திட்டத்தின்கீழ் நவீன வசதிகளுடன் பழனி ரெயில் நிலையம் புதுப்பொலிவு பெற உள்ளதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாடு முழுவதும் 'அம்ரித் பாரத்' திட்டத்தின்கீழ் முக்கிய ரெயில்நிலையங்களில் நவீன வசதிகள் செய்யப்பட உள்ளது. அதன்படி, மதுரை கோட்டத்தில் பழனி ரெயில்நிலையம் தேர்வாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடைமேடை விரிவாக்கம், நவீன வாகன நிறுத்தும் வசதி, மாற்றுத்திறனாளிகள்-முதியோர்களுக்கான கூடுதல் வசதிகள், நடைமேடைகளை இணைக்கும் மேம்பாலம், லிப்ட், உணவக வசதி செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு மதுரை கோட்ட அதிகாரிகள் பழனி ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர். விரைவில் திட்டப்பணிகள் தொடங்க உள்ளது" என்றார்.