'திருமண நாளிதழ்' நண்பரின் திருமணத்துக்கு வினோத பிளக்ஸ் வைத்த பழனி வாலிபர்கள்


திருமண நாளிதழ்  நண்பரின் திருமணத்துக்கு வினோத பிளக்ஸ் வைத்த பழனி வாலிபர்கள்
x

திண்டுக்கல்லில் நண்பரின் திருமணத்திற்காக அப்பகுதி இளைஞர்கள் செய்தித்தாள் போல வைத்துள்ள பிளக்ஸ் பேனர் அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

பழனி:

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள கோதைமங்கலத்தில் தனது நண்பரின் திருமணத்துக்கு நாளிதழ் வடிவில் பிளக்ஸ் அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோதைமங்கலத்தை சேர்ந்த கவுதம் என்பவர் சென்னையை சேர்ந்த வினிதா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

இதனை குறிப்பிடும் வகையில் காதலித்த குற்றத்துக்காக பெற்றோர்களால் ஆயுள் தண்டனை என்ற திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

விளையாட்டுச் செய்திகள் என கல்யாண பந்தியில் கலவரம் கரிக்கஞ்சிக்கு கைகலப்பு செய்த சதீஷ், தீபராஜ், முருகன் ஆகிய இளைஞர்கள் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் எனவும், பலகாரத்தில் முடிந்த பரிதாபங்கள் என்ற பெயரில் பால் விற்க சென்ற இடத்தில் கவிதாஸ், அருண், கார்த்தி என்பவர்கள் பலகாரம் திருடி பளார் என்று அரை வாங்கிய இளைஞர்கள் என கூறப்பட்டுள்ளது.

பின்னர் 'கல்யாண மாலை எங்களுக்குத் தேவை' என பாண்டியன் காளிதாஸ் ராஜேஷ் ஆகியோருக்கு பெண் கேட்டும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களது தொழில் என ஊமை சேட்டை, ஊரை ஏமாற்றுதல், வெட்டிப் பையன் என கலக்கி எடுத்துள்ளனர் நண்பர்கள்.

குறிப்பு :- சாதி மதம் தடையில்லை முன்பதிவு அவசியம், படிச்சது போதும் பந்திக்கு போங்க என வைக்கப்பட்டுள்ள இந்த பிளக்ஸ் பேனர் தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் திருமணத்திற்கு வந்த பலரும் அந்த பிளக்ஸ் பேனரை ரசித்துப் பார்த்ததோடு இந்த மாதிரியெல்லாம் யார் யோசித்தது என கல்யாணம் மண்டபத்தில் அவர்களை வளை போட்டு தேடி வருகின்றனர்.

பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த வினோத போஸ்டர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story