பழனியாண்டவர் கல்லூரி பேராசிரியர்கள் தர்ணா
பழனியாண்டவர் கல்லூரி பேராசிரியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி திண்டுக்கல் சாலையில் செயல்படுகிறது. இங்கு சுற்று வட்டார பகுதி மாணவர்கள் பயன்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் உள்ள 'மூட்டா' அமைப்பை (மதுரை காமராஜர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம்) சேர்ந்த பேராசிரியர்கள் நேற்று கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேராசிரியர்கள் 22 பேருக்கு பணி மேம்பாடு வழங்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்தும், தற்காலிக பணியாளர்களுக்கு ஆட்சிமன்ற குழு ஆணைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தி போராடினர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து போராட்டம் நடத்திய பேராசிரியர்கள் கூறுகையில், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் நாளையும் (அதாவது இன்று) வகுப்பு முடிந்த பின்பு போராட்டம் நடத்தப்படும் என்றனர்.