4 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி வெங்கடேஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பல்லடம் டி.எஸ்.பி.


4 பேர் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி வெங்கடேஷை துப்பாக்கியால் சுட்டு பிடித்த பல்லடம் டி.எஸ்.பி.
x
தினத்தந்தி 7 Sep 2023 7:28 AM GMT (Updated: 7 Sep 2023 8:00 AM GMT)

பல்லடம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான நெல்லையைச் சேர்ந்த வெங்கடேஷுக்கு 2 கால்களும் முறிந்துள்ளது.

பல்லடம்,

பல்லடம் 4 பேர் கொலை வழக்கில் சரணடைந்த முக்கிய குற்றவாளியான வெங்கடேசனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பல்லடம் தொட்டம்பட்டி பகுதியில் உள்ள முட்புதர்களில் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தான்.

இதையடுத்து ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக இன்று அதிகாலை 4.45 மணியளவில் பல்லடம் டி.எஸ்.பி. சவுமியா மற்றும் போலீசார் வேனில் பலத்த பாதுகாப்புடன் தொட்டம்பட்டி பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு சென்றதும் முட்புதர்களில் பதுக்கி வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வெங்கடேசன் போலீசாரிடம் எடுத்து கொடுத்தான். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவனை பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வேனில் அழைத்து சென்றனர். தொட்டம்பட்டி காட்டுப்பகுதியில் செல்லும்போது வெங்கடேசன் சிறுநீர் கழிக்க வேண்டும் என தெரிவித்தான். இதையடுத்து போலீசார் வேனை நிறுத்தினர். சிறுநீர் கழிக்க சென்ற வெங்கடேசனின் பாதுகாப்புக்காக 2 போலீசார் கூடவே சென்றனர். சிறிது தூரம் சென்றதும் வெங்கடேசன் திடீரென 2 போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தப்பிச்சென்றான்.

இதனை சற்றும் எதிர்பாராத டி.எஸ்.பி. சவுமியா உடனே தான் வைத்திருந்த துப்பாக்கியால் வெங்கடேசனை நோக்கி சுட்டார். இதில் அவரது ஒரு காலில் குண்டு பாய்ந்ததில் தவறி விழுந்தான். இருப்பினும் ஒரு காலுடன் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றான். மேலும் அவனை பிடிக்க முயன்ற போலீஸ்காரர்கள் மீது கற்களை வீசி தாக்கினான்.

இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதையடுத்து டி.எஸ்.பி. சவுமியா பாதுகாப்புக்காக வெங்கடேசன் மீது மற்றொரு ரவுண்டு சுட்டார். இதில் வெங்கடேசனின் மற்றொரு காலில் குண்டு பாய்ந்தது. 2 கால்களிலும் காயம் ஏற்பட்டதால் சரிந்து கீழே விழுந்த வெங்கடேசனை போலீசார் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் வெங்கடேசன் கல்லால் தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Next Story