பள்ளப்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்த வசதி ஏற்படுத்தப்படுமா?


பள்ளப்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில்  தொலைபேசி கட்டணம் செலுத்த வசதி ஏற்படுத்தப்படுமா?
x

பள்ளப்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்த வசதி ஏற்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

கரூர்

தொலைபேசி கட்டணம்

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் ெசயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை ேசா்ந்த பலா் பல ஆண்டுகளாக தங்களது ெதாலைேபசி கட்டணத்தை நேரடியாக வந்து செலுத்தி வந்தனர். தற்போது தொலைபேசி கட்டணம் செலுத்தும் வசதி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கொல்லப்பட்டி அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தொலைபேசி கட்டணம் செலுத்துவதென்றால் கரூரில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயம் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டால் ஆள் பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு:-

வீண் அலைச்சல்

அரவக்குறிச்சியை சேர்ந்த வீரக்குமார் கூறியதாவது:-

எனது உறவினர்களுக்காக பள்ளப்பட்டியில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு தொலைபேசி கட்டணம் செலுத்த சென்றேன். அப்போது அங்கு இதற்கான வசதி நிறுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் ஆன்லைனில் கட்டுங்கள் அல்லது கரூர் பி.எஸ்.என்.எல். அலுவலகத்திற்கு சென்று கட்டுங்கள் என்று கூறுகிறார்கள். ஆன்லைனில் சில நேரங்களில் பணம் கட்டும்போது திருப்பி வந்து விடுகிறது. இதனால் சில நேரங்களில் தவறு ஏற்ட வாய்ப்பு உள்ளது. இதனால் நான் கரூர் சென்று தொலைபேசி கட்டணம் செலுத்தி வந்தேன். இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. எனவே பள்ளப்பட்டியிலேயே அதற்கான வசதி ஏற்படுத்தினால் நன்றாக இருக்கும்.

சிரமமான செயல்

பள்ளப்பட்டியை சேர்ந்த பாப்புலர் அபுதாஹிர்:-

காலம், காலமாக பள்ளப்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்தும் வசதி இருந்து வந்தது. தற்போது அந்த வசதி நிறுத்தப்பட்டதால் பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பகுதி பி.எஸ்.என்.எல். சந்தாதாரர்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். வயதானவர்கள் கரூர் சென்று கட்ட வேண்டும் என்றால் மிகவும் சிரமப்படுவார்கள். குறிப்பாக பள்ளப்பட்டி பகுதியினர் பெரும்பாலும் வியாபாரத்திற்காக வெளியூர் சென்று விடுவார்கள். பெண்கள் தான் தொலைபேசி கட்டணம் கட்ட செல்வார்கள். பெண்கள் தொலைபேசி கட்டணம் கட்ட கரூர் சென்று வருவது மிகவும் சிரமமான செயல். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மீண்டும் பள்ளப்பட்டியில் கட்டண சேவையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீண்ட நேரம்

பள்ளப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் கப்ளிசேட்:-

பள்ளப்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் தொலைபேசி கட்டணம் செலுத்தும் வசதியை நிறுத்தி இருப்பது சந்தாதாரர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இந்ததுபோல் இந்த கட்டணம் செலுத்தும் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும். பள்ளப்பட்டி மற்றும் அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பொதுமக்கள் கரூர் சென்று வர வேண்டுமானலும் நீண்ட நேரம் ஆகும். வீட்டில் உள்ள ஆண்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். அதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் தான் கரூருக்கு பஸ்சில் சென்று கட்ட வேண்டும். இதனால் வீண் செலவும் ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஆட்கள் பற்றாக்குறை

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்,

பள்ளப்பட்டி பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பல ஆண்டுகளாக பொதுமக்கள் தங்களது தொலைபேசி கட்டணத்தை நேரடியாக வந்து கட்டி வந்தனர். சிலர் ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்தினர். ஆனால் தற்போது ஆட்கள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு பிரச்சினைகளால் இங்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் எடுத்தும் கூறி அதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும், என்றனர்.


Next Story