பார்வையாளர்களை கவர்ந்த பனை திருவிழா


நெல்லையில் நடந்த பனை திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

திருநெல்வேலி

நெல்லை அருகே தருவையில் பனை தேசிய திருவிழா நேற்று தொடங்கியது. தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பனை விதைகள் விதைப்பு

மத்திய அரசு 10 லட்சம் எக்டேரில் பனை விதைகளை நடவு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 7 ஆயிரம் எக்டேரில் பனை விதைகள் விதைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டிலும் பனை விதைகளை அதிகம் விதைப்பதற்கு அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பனம்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. நான் தினமும் பதநீர் பருகுகிறேன். இதனால்தான் 24 மணி நேரமும் உத்வேகத்துடன் பணியாற்ற முடிகிறது. மது விற்பனையில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், கடைகளில் அன்னிய மதுபானங்களை விற்பனை செய்யும்போது, உள்நாட்டில் தயாராகும் பனம்பால் எனும் பனங்கள்ளை ஏன் விற்க கூடாது? என்ற கேள்வி எழுகிறது. மது ஒழிக்கப்படும் வரை, கள்ளு கடைகளும் திறந்து இருக்கலாம்.

தொழிலாளர்களுக்கு காப்பீடு

பனை ஏறும் தொழில் மிகவும் சிரமமானது. பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து பலர் உயிரிழந்து உள்ளனர். எனவே பனை ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு வசதி செய்து கொடுக்க வேண்டும்.

பனை பொருட்களை முதலில் நாம் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு மாநில அளவில், தேசிய அளவில் பிரபலமாகி, உலக அளவில் பிரபலம் அடையும். விழாக்களில் பன்னாட்டு குளிர்பானம், காபி, டீ ஆகியவற்றை கொடுப்பதற்கு பதிலாக பதநீர், இளநீர், கருப்பட்டி காபி, சுக்கு காபி கொடுத்து உபசரிப்பது உடலுக்கு நன்மை தரும்.

பனை பொருட்கள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானது ஆகும். எனவே, பனை பொருட்கள் விற்பனையை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். பனை மரங்களை பாதுகாப்போம், பனை விதைகளை சேகரித்து அவற்றை விதைத்து, பனை மரங்களை அதிகம் வளர்ப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

பார்வையாளர்களை கவர்ந்தது

நெல்லையில் இருந்து மேலப்பாளையம் வழியாக சேரன்மாதேவி செல்லும் சாலையில் தருவை ஆற்றுப்பாலம் அருகில் இருபுறமும் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. இந்த பனங்காட்டின் நடுவில் நடைபெற்ற தேசிய பனை திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

விழாவையொட்டி சிலம்பாட்டம், பெரும் சலங்கை ஆட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், பனைமரம் பற்றி அச்சங்குன்றம் மாதவியின் வில்லிசை பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பனை ஏறுவது குறித்து பயிற்சி அளித்தனர்.

மேலும் பார்வையாளர்களுக்கு பாரம்பரிய உணவுகளை வழங்கும் வகையில் தேங்காய் துவையல், தயிர் சாதம் போன்றவை வழங்கப்பட்டது. வெட்ட வெளியில் சாலையோரத்தில் பனங்காட்டுக்குள் நடத்தப்பட்ட இந்த விழா பார்வையாளர்களையும், அந்த வழியாக சென்றவர்களையும் வெகுவாக ஈர்த்தது. தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பனை தேசிய திருவிழா நடைபெறுகிறது.

முன்னதாக ஒருங்கிணைப்பாளர் செல்வ ராமலிங்கம் வரவேற்று பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் ரூபி.மனோகரன் எம்.எல்.ஏ. பேசினார். விழாவில் பா.ஜனதா வடக்கு மாவட்ட தலைவர் தயா சங்கர், சாமிதோப்பு பாலபிரஜாபதி அடிகளார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி அச்சுதன் நாடார், வக்கீல்கள் பால கணேசன், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் வாழ்வரசி பாண்டியன், செல்வராமலிங்கம், குயிலி நாச்சியார், டாப் ராஜா உள்ளிட்டவர்கள் செய்து இருந்தனர்.



Next Story