தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிப்பு

தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் ஓசன்னா பாடல்களை பாடி சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறையொட்டி கிறிஸ்தவர்கள் ஓசன்னா பாடல்களை பாடி சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
குருத்தோலை ஞாயிறு
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மரித்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டு கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. இந்த 40 நாட்கள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் ஜெபம், தவம், தானம் செய்து இறைவனின் அருள் பெற வேண்டுகின்றனர். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்தநாள் புனித வெள்ளி என்றும், உயிர்த்தெழுந்த 3-ம் நாள் தினம் ஈஸ்டர் உயிர்ப்பு ஞாயிறு என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த ஈஸ்டர் பண்டிகைக்கு முதல் வார ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்பாக ஜெருசலம் நகரின் வீதிகளின் வழியாக அழைத்து வந்தபோது வழி நெடுகிலும் மக்கள் குருத்தோலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடியதால் அதனை நினைவு கூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு திருப்பலி
இதன்படி நேற்று குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபக்கூட்டங்கள் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நடைபெற்றது. ராமநாதபுரம் ரோமன் சர்ச் புனித ஜெபமாலை அன்னை தேவாலயம் மற்றும் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவற்றின் சார்பில் குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குருத்தோலை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஓசன்னா பாடல்களை பாடியவாறு தேவாலயத்திற்கு வந்து அங்கு நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
புனித ஜெபமாலை அன்னை ஆலயத்திலும், சி.எஸ்.ஐ. தேவாலயத்திலும் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. குருத்தோலைகளை வீடுகளுக்கு கொண்டு சென்று அடுத்த ஆண்டு அதனை எரித்து அதன் சாம்பலை பூசி அந்த ஆண்டிற்கான ஈஸ்டர் தவக்காலத்தை சாம்பல் புதன் அன்று தொடங்குவது வழக்கமாக கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவின் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாகவும்,, ஞாயிறு ஈஸ்டர் ஞாயிறாகவும் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர்.
கமுதி, சாயல்குடி
கமுதி மெயின்பஜாரில் உள்ள பதுவை புனித அந்தோணியார் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனி வந்தனர். பின்னர் சிறப்பு திருப்பலி பூஜையில், அனைவரும் கலந்து கொண்டனர். சாயல்குடி அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் நடைபெற்ற குருத்தோலை நிகழ்ச்சிக்கு பாதர் பாஸ்கர் டேவிட் தலைமை தாங்கினார். சாயல்குடி தொன்போஸ்கோ ஸ்கூல் ஆப் எக்ஸலண்ஸ் தாளாளர் ஆரோக்கியம், பள்ளி முதல்வர் ஆல்பிரட், நிர்வாகிகள் சார்லஸ், பிரபு, நிர்வாகி ரோஷன் முன்னிலை வகித்தனர். சாயல்குடி வி.வி.ஆர். நகர் பகுதியில் இருந்து பெண்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்பு மாதா கோவிலில் ஜெபம் செய்யப்பட்டது. இதில், மாதா கோவில் தலைவர் அந்தோணி ராஜன், செயலாளர் ஆனந்தராஜ், பொருளாளர் பரலோக ராஜ், முன்னாள் தலைவர் ஜெயராஜ், முன்னாள் செயலாளர் காமராஜ், நிர்வாகி அருள் பால்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
திருவாடானை
திருவாடானை தாலுகா ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. ஓரியூர் கலை மனைகளின் அதிபர் அருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் அருட்தந்தையர்கள் சிறப்பு கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றினர். இறை மக்களுக்கு அருட்தந்தையர்கள் அருட்பிரசாதம் வழங்கினர்.
இதேபோல் திருவாடானை தாலுகாவில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு கூட்டு திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஜெபம் செய்தனர்.






