தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு


தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு
x

தஞ்சை கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர்

தஞ்சை கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

தவக்காலம் தொடக்கம்

கிறிஸ்தவ மக்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை ஒன்றாகும். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுவதை கொண்டாடும் வகையில் உயிர்ப்பு பெருவிழாவாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்களை தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.

தவக்காலத்தின் தொடக்கமான சாம்பல் புதனையொட்டி கடந்த பிப்ரவரி 22-ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தன. வெள்ளிக்கிழமைகளில் சிலுவைப்பயணமும் மேற்கொண்டனர். தவக்காலத்தின் உச்சக்கட்டமாகவும், புனித வாரத்தின் தொடக்கமாகவும் வரும் ஞாயிற்றுக்கிழமை குருத்து ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.

எருசலேம் பயணம்

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேமில் இயேசுவை கோவேரி கழுதையில் அமரவைத்து ஒலிவ மரக்கிளைகளை கையில் ஏந்தி வீதியில் மக்கள் புடைசூழ தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்ற முழக்கங்களோடு எருசலேமிற்குள் மாபெரும் வீரப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

இயேசுவின் வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த வரலாற்று பயணத்தை நினைவுகூறும் வகையில் குருத்து ஞாயிறாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் தேவாலயம் சென்று வழிபாடு நடத்துவார்கள். புனிதம் செய்த குருத்தோலையை வீடுகளுக்கு கொண்டு சென்று வைத்து வழிபாடுவார்கள்.

குருத்தோலை ஞாயிறு வழிபாடு

அதன்படி நேற்று கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு வழிபாட்டையொட்டி கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனியாக சென்றனர். கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.

தஞ்சை திருஇருதய பேராலயத்தில் குருத்து ஞாயிறு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக புனித வியாகுலஅன்னை ஆலயத்தில புனித சேவியர் தொழிற்பயிற்சி பள்ளி தாளாளர் சூசை மாணிக்கம் அடிகளார் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடந்தது.

பவனி

தொடர்ந்து மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை புனிதம் செய்யும் சடங்கு நடந்தது. பின்னர் வியாகுலமாதா ஆலய வளாகத்தில் இருந்து குருத்தோலை பவனி திரு இருதய பேராலயம் நோக்கி வந்தது. அப்போது இறைமக்கள் புனிதம் செய்யப்பட்ட குருத்தோலையை கையில் ஏந்தியவாறு செபித்துக்கொண்டும், ஓசான்னா பாடலை பாடிக்கொண்டும் வந்தனர்.

இதில் பேராலய பங்குத்தந்தை பிரபாகர், உதவி பங்குத்தந்தை பிரவீன், ஆயரின் செயலாளர் ஆன்ட்ரூ செல்வகுமார், திருத்தொண்டர் அரவிந்த் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பங்கு பேரவை துணைத் தலைவர் வின்சென்ட் தலைமையில் செயலாளர் குழந்தைராஜ் மற்றும் அன்பிய பொறுப்பாளர்கள், இளைஞர் மன்றத்தினர், பக்த சபையினர் செய்து இருந்தனர்.

சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம்

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே உள்ள கோட்டை சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது. ஆயர் பிரைட்பிராங்க்ளின் தலைமையில் நடந்த வழிபாட்டில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆலயத்தில் இருந்து குருத்தோலையை திருச்சபை மக்கள் கையில் ஏந்தியவாறு பவனியாக பாடல்களை பாடிக்கொண்டு சோழன்சிலை வரை சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது. குருத்தலைஞாயிறு இறைசெய்தியை ஆயர் பிரைட்பிராங்க்ளின் அளித்தார். முடிவில் திருவிருந்து நற்கருணை ஆராதனையுடன் வழிபாடு முடிவடைந்தது. இதில் ஏராளமான திருச்சபை மக்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

இதே போல் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயம், புதுக்கோட்டை சாலையில் உள்ள புனித அடைக்கல அன்னை ஆலயம், குழந்தை ஏசு ஆலயம், மங்களபுரத்தில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

குருத்தோலை ஞாயிறு பவனி

குருத்தோலை ஞாயிறையொட்டி தஞ்சை மாநகர அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் இணைந்து நடத்திய குருத்தோலை பவனி தஞ்சையில் நேற்றுமாலை நடந்தது. தஞ்சை ரெயிலடியில் இருந்து கிறிஸ்தவ ஒன்றிணைப்பு பணிக்குழு செயலாளர் விக்டர்தாஸ் தலைமையில் புறப்பட்ட இந்த குருத்தோலை பவனி எம்.கே.மூப்பனார் சாலை வழியாக தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. தூய பேதுரு ஆலயத்தில் நிறைவடைந்தது.

இதில் மாநகரில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலய ஆயர்கள், பங்குத்தந்தைகள், இறைமக்கள், திருச்சபையினர் கலந்து கொண்டனர். பின்னர் ஆலய வளாகத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடந்தது. அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகள் தலைவர் சகாயராஜ் குருத்தோலை ஞாயிறு ஆசியுரை வழங்கினார்.

வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) புனிதவெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் எனப்படும் உயிர்ப்பு ஞாயிறு தினம் கொண்டாடப்பட உள்ளது.


Next Story