விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள்


விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள்
x

மடத்துக்குளம் வட்டாரத்தில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

திருப்பூர்

மடத்துக்குளம் வட்டாரத்தில் பனை மேம்பாட்டு இயக்கம் மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பனை தொழிலாளர்கள்

தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டுமல்லாமல் தமிழர்களின் வாழ்வோடு இணைந்துள்ள பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும், மண் அரிப்பை தடுக்கும், மண்ணை உறுதிப்படுத்துவதுடன் வளப்படுத்தியும் மண்ணுக்கு ஏற்ற மரமாக விளங்குகிறது. அடி முதல் நுனி வரை பலன் அளிக்கக்கூடிய பனை மரங்கள் தமிழ்நாட்டில் 5 கோடி அளவில் உள்ளன. நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல், பாய் முடைதல், கூடை பின்னுதல் என பனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த பனைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, பனை மரங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு பனை சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு வேளாண் நிதி நிலை அறிக்கையில் பனை மேம்பாட்டு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தோட்டக்கலைத் துறை மூலமாக விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகிறது.

பனை விதைகள்

பனை விதைகளை சேகரிக்க தேவைப்படும் தாய் பனைகள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இன்றி அதிக விளைச்சல் கொண்டதாகவும், முறையாக காய்க்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். தாய்ப்பனையில் இருந்து சேகரிக்கப்பட்ட பழுத்த பழங்களை 4 வாரங்களுக்கு நிழலில் குவித்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் விரைவில் முளைப்புத் திறன் ஏற்படும்.

விதைப்பதற்கு முன்பு பனங்கொட்டைகளை 3 மணி நேரம் நீரில் ஊற வைத்தால் 100 சதவீத முளைப்புத்திறனை பெறலாம். பனை மரங்கள் எல்லா வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டவை. இவற்றை ஆண்டு முழுவதும் நடவு செய்யலாம் என்றாலும் கார்த்திகை மாதத்தில் நடவு செய்வதன் மூலம் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பனங்கொட்டைகளை நேரடியாக விதைத்தும், நாற்று விட்ட பனங்கிழங்கு எடுத்து நட்டும் பனையை வளர்க்கலாம்.

நீர் பாய்ச்சுதல்

விதைகளை நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். முதல் ஒரு வருடத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 2 முதல் 3 வருடம் வரை மாதம் ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் பருவமழை சீராக பெய்தால் நீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இருக்காது. தொழு உரம் மற்றும் மணல் கலந்த கலவையை பாதி குழி வரை நிரப்ப வேண்டும். 3 வாரங்களில் முளைக்க தொடங்கி விடும். 6 வாரங்களில் முளைப்பு முடிந்து விடும். ஒவ்வொரு குழியிலும் ஒரு ஆரோக்கியமான செடியினை விட்டு மற்றவற்றை பிடுங்கி விட வேண்டும்.

பனைமரம் வளர்ச்சி மெதுவாக இருக்கும். விதைத்து 5 மாதங்கள் கழித்து தான் முதல் குருத்தோலை தோன்றும். 13 முதல் 15 வருடம் கழித்து பதநீர் கொடுக்கும். சராசரியாக ஒரு மரம் வருடத்திற்கு 125 முதல் 150 லிட்டர் பதநீர் கொடுக்கும்.

‌ஒரு லிட்டர் பதநீர் காய்ச்சினால் 180 முதல் 250 கிராம் பனைவெல்லம் கிடைக்கும். ஒரு மரத்திலிருந்து ஆண்டுக்கு 24 கிலோ பனைவெல்லம் உற்பத்தி செய்ய முடியும். தற்போது மடத்துக்குளம் வட்டாரத்திற்கு தோட்டக்கலை துறை மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் வழங்குவதற்காக 1900 பனை விதைகள் இருப்பில் உள்ளது. ‌ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் வழங்கப்பட உள்ளது. குறைவான எண்ணிக்கையில் இருப்பு உள்ளதால் முன்னுரிமை அடிப்படையில் வரும் விவசாயிகளுக்கு பனை விதைகள் வழங்கப்படும். சிட்டா, ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகினால் உடனடியாக பனை விதைகளை பெற்று நடவு செய்யலாம். ‌விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் வேலிப்பயிராக பனை மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெற முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story