வாழை பயிரிட்டு பாதிப்படைந்த தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு
சேவூர் அருகே ஜெயின் நிறுவனத்தால் வாழை விவசாயத்தில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் தோட்டத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வாழை சாகுபடி
அவினாசி ஒன்றியம் தண்டுக்காரன்பாளையம், குமாரபாளையம், ஆதராம்பாளையம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயின் நிறுவன வாழைக்கன்று பயிரிட்டு 13 மாதமாகியும் வாழைக்காய் வளர்ச்சி அடையவில்லை. பாதி பழங்களாகவும் மீதி பிஞ்சுகளாகவும் இருந்துள்ளது. இந்த வாழைக்காய்களை வியாபாரிகளும் விலை கொடுத்து வாங்க மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் ஜெயின் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
இதையடுத்து அவினாசி தாசில்தார் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், ஜெயின் நிறுவனத்தினர் ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வாழைகளை ஆய்வு மேற்கொண்டு கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பிப்பது என முடிவு செய்தனர்.
ஆய்வு
இந்நிலையில் நேற்று தண்டுக்காரன்பாளையம் கிராமத்திற்கு, வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்கள் தலைமையில் கோவை மாவட்ட வேளாண்மை துறை சார்பாக விதை ஆராய்ச்சியாளர் சுந்தரவடிவேல் மற்றும் திருச்சி வாழை ஆராய்ச்சி மையத்தில் இருந்து தாவரவியல் அறிஞர் லோகநாதன், மண் ஆராய்ச்சி அறிஞர் ஜெயபாஸ்கரன், பழ ஆராய்ச்சி அறிஞர் சரஸ்வதி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தோட்டகலை துணை இயக்குநர் சந்திரகவிதா, அவினாசி வட்ட வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டகலை உதவி இயக்குநர் மற்றும் வருவாய் துறையினர் தலைமையில் பாதிக்கப்பட்ட வாழைதோட்டங்களை பார்வையிட்டனர். பார்வையிட்டு மண், வாழைப்பழம், வாழைஇலை, வாழைதண்டு ஆகியவற்றை ஆராய்ச்சிக்கு எடுத்துசென்று உள்ளனர்