சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா தொடங்கியது


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா தொடங்கியது
x

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா நேற்று தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா நேற்று தொடங்கியது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பஞ்சப்பிரகார விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி, இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இந்த விழா வருகிற 23-ந்தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து 8 நாட்களுக்கு இரவு அம்மன் வெள்ளி கேடயத்தில் புறப்பாடு ஆகிறார். 14-ந்தேதி அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

15-ந்தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள் வட காவிரியில் இருந்து வெள்ளிக்குடங்களில் தீர்த்தம் கொண்டு வருதல் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் கொண்டு வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிக்கு பஞ்சப்பிரகார மகா அபிஷேகம் நடைபெறுகிறது.தொடர்ந்து வெள்ளி விமானத்தில் அம்மன் எழுந்தருளி இரவு 12 மணிக்கு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.16-ந்தேதி இரவு அம்மன் தங்க சிம்ம வாகனத்தில் புறப்பாடாகிறார். 17-ந்தேதி இரவு 12 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் எழுந்தருளுகிறார்.

தங்ககமல வாகனம்

18-ந்தேதி தங்க கமல வாகனத்திலும், 19-ந்தேதி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், 20-ந் தேதி வெள்ளி காமதேனு வாகனத்திலும், 21-ந்தேதி மர கற்பக விருட்ச வாகனத்திலும், 22-ந்தேதி மரகாமதேனு வாகனத்திலும், 23-ந்தேதி அம்மன் மர அன்னபட்சி வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story