உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா


உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா
x

உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் பஞ்சப்பிரகார விழா நடைபெற்றது.

திருச்சி

திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற காந்திமதியம்மை உடனாய பஞ்சவர்ணேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிபவுர்ணமியன்று பஞ்சப்பிரகார விழா சிறப்பாக நடக்கும். இந்நாளில், இங்குள்ள சிவனை வணங்குவோருக்கு, பஞ்சபூதங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு பஞ்சப்பிரகார விழா ஆடி மாத பவுர்ணமி தினமான நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் காலை 9 மணிக்கு கட ஸ்தாபனம், ருத்ரபாராயணம், காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்தி, உதங்க மகரிஷிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு தீபாராதனை காட்டப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மூலவர், பஞ்சமூர்த்தி ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு பஞ்சப்பிரகார விழா தொடங்கியது. இரவு 8 மணிக்கு உதங்க மகரிஷிக்கு பஞ்சவர்ணேஸ்வரர்-காந்திமதியம்மை காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சவர்ணேஸ்வரர்-காந்திமதியம்மை, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உதங்க மகரிஷிக்கு காட்சி அளித்தனர். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு முதல் பிரகாரத்தில் வேத பாராயணம், இரண்டாம் பிரகாரத்தில் திருமுறை பாராயணம், மூன்றாம் பிரகாரத்தில் மங்கள வாத்தியம், நான்காம் பிரகாரத்தில் திருமுறை மங்கள வாத்தியம் நடைபெற்றது. ஐந்தாம் பிரகாரத்தில் அனைத்து பாராயணம் மற்றும் வாணவேடிக்கை, மங்கள இசை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் புனிதா மற்றும் கோவில் பணியாளர்கள், உதங்க மகரிஷி பவுர்ணமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.


Next Story