ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு

விராட்டிக்குப்பம் ஊராட்சியில் ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் விராட்டிக்குப்பம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி இயக்கக ஊராட்சித்துறை கூடுதல் இயக்குனர் ராஜஸ்ரீ திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளை நேரில் சந்தித்து பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ததுடன் பயனாளிக்கு முதல் தவணையாக ரூ.41,985, 2-ம் தவணையாக ரூ.64,072, 3-ம் தவணையாக ரூ.78,536, 4-ம் தவணையாக ரூ.92,697 என்ற அடிப்படையில் தொகையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய கால நேரத்தில் வழங்க வேண்டும் எனவும் துறையின் மூலம் வழங்கப்படும் கட்டுமான பொருட்கள் உரிய நேரத்தில் பயனாளிகளுக்கு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் முறையாக குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறதா என்றும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளில் அனைத்து பணியாளர்களுக்கும் 100 நாட்கள் வேலை வழங்குவது உறுதி செய்யப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது உதவி திட்ட அலுவலர் குருசாமி, உதவி செயற்பொறியாளர் நித்யா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், ஜானகி உள்பட பலர் உடனிருந்தனர்.