ஊராட்சி ஊழியர் வெட்டிக்கொலை
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஊராட்சி ஊழியர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம், நயினார்கோவில் யூனியன், வாகவயல் ஊராட்சியை சேர்ந்தவர் சந்தியாகு (வயது 52). இவர் வாகவயல் ஊராட்சியில் மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு இவரும், மருதூரை சேர்ந்த பழனியும்(45) கொடிக்குளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பொட்டகவயல் கண்மாய் பகுதிக்கு வந்தனர். அப்போது இவர்களை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் இருவரையும் சரமாரியாக ஆயுதங்களால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டது. இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் ேபாலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி சந்தியாகு பரிதாபமாக இறந்தார். பழனி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்து இருக்கலாம் என திருப்பாலைக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.