குளம், குட்டை தூர்வார ஊராட்சி தலைவர்கள் விண்ணப்பிக்கலாம்கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தகவல்
குளம், குட்டை தூர்வார ஊராட்சி தலைவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தொிவித்துள்ளாா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகளில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள ஊராட்சி தலைவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
தடுப்பணைகள்
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர், வரட்டுப்பள்ளம், குண்டேரிப்பள்ளம் உள்பட 5 அணைகள் உள்ளன. 22 பெரிய ஏரிகள், 21 சிறுபாசன ஏரிகள், 690 குளம், குட்டைகள் உள்ளன. மேலும், 134 தடுப்பணைகள், 366 பண்ணை குட்டைகளும் உள்ளன.
பெரும்பாலான மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மாவட்டத்தில் வறட்சி அதிக பகுதிகளான நம்பியூர், மொடக்குறிச்சி, அம்மாபேட்டை, அந்தியூர், பவானிசாகர், சென்னிமலை உள்ளிட்ட இடங்களில் உள்ளன. இதன் மூலமாக ஆண்டுக்கு 26.3 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும்.
தூர்வார விண்ணப்பிக்கலாம்
இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் குளம், குட்டைகளில் தண்ணீரை சேமிக்கும் வகையில் தூர்வார அந்தந்த ஊராட்சி தலைவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மழை நீரை சேமிக்கும் வகையில் ஊராட்சி ஒன்றியம், கிராம ஊராட்சிகளில் உள்ள குளம், குட்டைகள் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எந்தெந்த குளம், குட்டைகளை தூர்வார வேண்டும் என்று ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தால் அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக இந்த பணிகளை முடிக்க வேண்டும்", என்றார்.