வறட்சியை சமாளிக்க போர்வெல் அமைக்க வேண்டும்-இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
வறட்சியை சமாளிக்க போர்வெல் அமைக்க வேண்டும் என இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இளையான்குடி
வறட்சியை சமாளிக்க போர்வெல் அமைக்க வேண்டும் என இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றிய குழு கூட்டம்
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய சேர்மன் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊர்காவலன், ரஜினி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வரவு, செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- ஒன்றிய குழு உறுப்பினர் முருகானந்தம்:- ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து ரூ.20 லட்சம் கடந்த 11.8.2022-ல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட பணத்திற்கான ஒப்புதல் இன்று வரை ஒன்றிய குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறவில்லை. துணை சேர்மன் தனலட்சுமி:- ஒன்றிய குழு பொது நிதியிலிருந்து கட்டப்பட்டு திறப்பு விழாவின்போது உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்புவதில்லை. கல்வெட்டுகளிலும் பெயர்கள் இடம்பெறுவதில்லை.
கரு.சீமைச்சாமி:- ஒவ்வொரு கூட்டத்திலும் மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முறையீடு செய்தும், மானாமதுரை மின்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.
போர்வெல்
சண்முகம்:- வறட்சி காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் போர்வெல் அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுபாலை முதல் அரையாண்டிபுரம் ரோடு டெண்டர் விடப்பட்டு நீண்ட காலமாகியும் பணிகள் நடைபெறவில்லை. செழியன்:- சூராணம் பகுதியில் குப்பை கிடங்கிற்கான இடமில்லை. இதனால் அனைத்து குப்பைகளையும் வரத்து கால்வாயில் கொட்டப்படுவதால் கண்மாய்க்கு வரும் தண்ணீர் வீணாகி விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
முருகன்:- சுபாஷ் நகர் பகுதியில் உலர் கலன் அமைக்க இடம் தேர்வு செய்து அளவீடு செய்ய பணம் கட்டி சர்வேயர் அளவீடு செய்ய பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
பெயர் பலகை
கீர்த்தனா:- அரசு விழாக்களில் உறுப்பினர் பெயர் இல்லாமல் பெயர் பலகை வைத்ததால் விஜயன்குடியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தாயமங்கலம் பங்குனி திருவிழா வருவதால் சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலையரசி:- நன்னியாவூர் கிராமத்தில் குளியல் தொட்டி, ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையலறை, கழிப்பறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார். கூட்டத்தில் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாரதி ராஜன். கருஞ்சுத்தி ராஜா, கனகராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.