லாரி மோதி ஊராட்சி பணியாளர் பலி; மனைவி படுகாயம்
மண்டையூர் அருகே லாரி மோதி ஊராட்சி பணியாளர் பலியானார். அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் இளமாறன் (வயது 38). இவர் கும்பக்குடி ஊராட்சியில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி மோட்டார் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் இளமாறன் தனது மனைவி தமிழரசி (28), 2 வயது பெண் குழந்தை ஆகியோருடன் நேற்று மதியம் அண்ணா நகரில் இருந்து அவர்களது மோட்டார் சைக்கிளில் கீரனூர் அருகே உள்ள வீரமாகாளி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். மாலை 5.30 மணியளவில் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் அண்ணா பல்கலைக்கழகம் அருகே சென்ற போது எதிரே வந்த ஒரு மினி லாரி இளமாறன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளமாறன் தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் தமிழரசி படுகாயம் அடைந்தார். 2 வயது பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர் பிழைத்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மண்டையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த தமிழரசியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த இளமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவை சேர்ந்த மினி லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.