பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
சங்கராபுரம் அருகே பாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா 35 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்றது.
சங்கராபுரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாண்டலம் பிரசித்தி பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர் திருவிழா கடந்த 1987 ஆம் ஆண்டு நடைபெற்றது. இக்கோவிலில் கடந்த 6 -ம் தேதி உள்காப்பும், மற்றும் வெளிகாப்பும், பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
மணி நதி அணைக்கட்டில் இருந்து பச்சை பரப்பி சக்தி அழைத்தல், சூரிய பிரபை, சந்திர பிரபை, மயில் வாகனத்தில் அம்மன் வீதி உலா, அய்யனார், துர்க்கை அம்மனுக்கு ஊரணி பொங்கல், எல்லைச்சட்டி உடைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டும், யாக வேள்விகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார்.
அப்போது விழா குழுவினர்கள் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.