லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம்
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
லால்குடி சப்தரிஷீஸ்வரர் கோவில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சப்தரிஷீஸ்வரர் கோவில்
லால்குடியில் பிரசித்திபெற்ற சப்தரிஷீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சுவாமி 7 முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்றும், இத் தலம் திருத்தவத்துறை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் பங்குனி தேரோட்டம் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் காலையில் சுவாமியும், அம்பாளும், பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமியும், அம்பாளும் அலங்கரிக்கப்பட்டு தேருக்கு அழைத்து வரப்பட்டனர். சிறப்பு பூஜைக்கு பின்னர் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இதில் லால்குடி, ஆங்கரை, மணக்கால், நன்னிமங்கலம், மும்முடி சோழமங்கலம், சாத்தமங்கலம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தேர் ரதவீதிகளில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. தேரோட்டத்தையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.