வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா
சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா வரும் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காளையார்கோவில்
சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா வரும் 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பங்குனி திருவிழா
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான விழா வருகிற 30-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வரும் 29-ந்தேதி மாலை அனுக்கை மற்றும் விக்னேஷ்வரர் பூஜையுடன் விழா தொடங்குகிறது.
மறுநாள் காலை 8.15 மணி முதல் 10.15 மணிக்குள் கொடிமரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் மற்றும் தினந்தோறும் காலையில் கேடக விமானத்திலும், இரவு பூதகி வாகனம், கிளி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், காளை வாகனம், சிம்ம வாகனம், தங்க குதிரை வாகனம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
தேரோட்டம்
9-ம் திருநாளான வரும் ஏப்ரல் மாதம் 7-ந்தேதி அதிகாலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் திருத்தேரில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 8.15 மணி முதல் 10.15 மணிக்குள் தேரோட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் காலை தீர்த்தவாரி உற்சவம் மற்றும் இரவு பூப்பல்லக்கு வீதி உலாவும், 9-ந்தேதி காலை விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் நாராயணி ஆகியோர் செய்து வருகின்றனர்.