கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா


கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா
x
தினத்தந்தி 31 March 2023 12:15 AM IST (Updated: 31 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வருகிற 7-ந்தேதி தேரோட்டம் நடக்கிற

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வருகிற 7-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

பங்குனி திருவிழா தொடக்கம்

காளையார்கோவில் அருகே உள்ள கொல்லங்குடி அரியாகுறிச்சியில் பிரசித்தி பெற்ற வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட இந்த கோவிலில் நீதி கேட்டு வரும் பக்தர்களுக்கு அம்பாள் உரிய நீதியை வழங்கி அருள்பாலிக்கும் கோவிலாக திகழ்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை மற்றும் விக்னேஷ்வரர் பூஜை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இரவு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் கேடக விமானத்தில் அம்பாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் காலை கேடக விமானத்திலும், இரவு பூதகி வாகனம், கிளி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், காளை வாகனம், சிம்ம வாகனம், தங்க குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

தேரோட்டம்

முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி காலை 5.15 மணி முதல் 6.15 மணிக்குள் தேரில் அம்பாள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 8.15 மணி முதல் 10.15 மணிக்குள் தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு யானை வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 8-ந்தேதி காலையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பக்தர்கள் பால்குடம், சந்தன குடம் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

9-ந்தேதி காலை ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியும், இரவு மூலஸ்தான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க ரதம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பழனிக்குமார் தலைமையில் உதவி ஆணையர் ஞானசேகரன், கோவில் செயல் அலுவலர் நாராயணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story