திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது - 9-ந் தேதி தேரோட்டம்


திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது  - 9-ந் தேதி தேரோட்டம்
x

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 9-ந் தேதி தேரோட்டம் நடக்க இருக்கிறது.

மதுரை

திருப்பரங்குன்றம்,


திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 9-ந் தேதி தேரோட்டம் நடக்க இருக்கிறது.

கொடியேற்றம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்ட திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பங்குனி பெருவிழா கோலாகலமாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. விழாவை முன்னிட்டு நேற்று காலை 7.20 மணி அளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானை-சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.

இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் புறப்பட்டு கம்படித்தடி மண்டபத்தில் தெய்வானையுடன் எழுந்தருளினார். கொடி மரத்துக்கு பால், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் கொடியேற்றம் நடந்தது. அப்போது அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பி முருகப்பெருமானை தரிசித்தனர்.

விழாவின் முதல் நாளான நேற்று குயவர் மண்டகப்படியில் மயில்வாகனத்தில் முருகப்பெருமான், தெய்வானையுடன் எழுந்தருளினார்.

திருவிழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலுமாக பல்வேறு வாகனங்களில் சுவாமி அம்பாள் எழுந்தருளி நகர்உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

திருக்கல்யாணம்-தேரோட்டம்

முக்கிய நிகழ்ச்சிகளாக வருகின்ற 1-ந்தேதி கைப்பாரமும், 5-ந்தேதி பங்குனி உத்திரமும், 6-ந்தேதி சூரசம்ஹார லீலையும், 7-ந்தேதி பட்டாபிஷேகமும், நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக 8-ந்தேதி திருக்கல்யாணமும், 9-ந்தேதி தேரோட்டமும், 10-ந்தேதி தீர்த்த உற்சவமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் நா.சுரேஷ் தலைமையில் சிவாச்சாரியார்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். முதல்முறையாக கொடியேற்ற நிகழ்ச்சி அறநிலைத்துறை இணையதளம் மூலம் ஒளிபரப்பப்பட்டது.


Next Story