முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல்விழா
மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல்விழா நடைபெற்றது.
மானாமதுரை,
மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பொங்கல் விழா 10 நாட்கள் நடைபெறும். இந்தாண்டு பொங்கல் விழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களின் போது தினந்தோறும் அம்மனுக்கு மண்டகப்படி தாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி எஸ்.கரிசல்குளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் முளைப்பாரி, தீச்சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை எடுத்து வந்து கோவில் முன்பாக பூக்குழி இறங்கி அம்மனை வழிபட்டனர்.
கோவில் வளாகத்தில் ஏராளமானோர் மாவிளக்கு, பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் லெட்சுமண ராக்கு சுவாமிகள், பாண்டி, போதும் பொண்ணு ஆகியோர் செய்திருந்தனர்.