சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா - சுவாமிக்கு குடம் குடமாக பாலாபிஷேகம்
சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.
அழகர்கோவில்
சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவில் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது.
சோலைமலை முருகன் கோவில்
பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில் முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவிலாகும். இக்கோவில் மதுரையை அடுத்த அழகர்கோவில் மலை உச்சியில் அமையப் பெற்றுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர திருவிழா நடைபெறுவது தனிச் சிறப்புடையதாகும். இந்த விழாவானது நேற்று நடைபெற்றது. இதில் காலையில் அழகர் மலை அடிவாரத்தில் உள்ள 18-ம் படி கருப்பணசுவாமி ராஜகோபுரம் முன்பு இருந்து பக்தர்கள் 108 பால் குடங்கள் எடுத்து பாதயாத்திரையாக சோலைமலை முருகன் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் பகல் 12 மணிக்கு மூலவர் சுவாமிக்கு உச்சிகால பூஜைகள்நடைபெற்றது. தொடர்ந்து சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சுவாமிக்கு, சந்தனம், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.
பாலாபிஷேகம்
இதில் சுவாமிக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சர்வ அலங்காரம், தீப, தூப, பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமி, வெள்ளி மயில் வாகனத்தில் பல்லக்கில் எழுந்தருளி, மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் வெளி பிரகாரங்களின் வழியாக புறப்பாடாகி பின்னர் அதே பரிவாரங்களுடன் வந்து இருப்பிடம் சேர்ந்தது. விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து இருந்து நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து இருந்தனர்.
மேலும் திருப்பரங்குன்றம் அருகே சோளங்குருணி ஊராட்சியில் ஊருணி கரையில் உள்ள ஸ்ரீஊர்க்காவலன் சேவுகப்பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக 5 கரைதாரர்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகத்தின் கீழ் 2 நாட்கள் நாடகம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர் .திருவிழாவின் முத்தாய்ப்பாக 9 நாட்கள் தொடர்ந்து பக்தர்களின் நேர்த்திக்கடன், நாடகம் விடிய, விடிய நடந்தது.