முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா


முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 5 April 2023 12:15 AM IST (Updated: 5 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கடலூர்

விருத்தாசலம்:

விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு மணிமுக்தாற்றங்கரை தீர்த்த மண்டபத்தில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

காவடி எடுத்து நேர்த்திக்கடன்

இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர் மற்றும் சித்தி விநாயகர் 4 கோட்டை வீதி, கடை வீதி, அய்யனார் கோவில் வீதி வழியாக சென்று விட்டு மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் மணிமுக்தாற்றில் இருந்து அலகு குத்தியும், பால் காவடி, மயில் காவடி, வேல் காவடி எடுத்தும் ஊர்வலமாக கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடர்ந்து கொளஞ்சியப்பருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

தேரோட்டம்

இதேபோல் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமிக்கும் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விருத்தகிரிகுப்பம் சுப்பிரமணியர் சாமி கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். விருத்தாசலம் இந்திரா நகரில் பாலமுருகன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து சென்றன. இதனை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதேபோல குப்பநத்தம், ஆலிச்சிக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைந்துள்ள முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா நடந்தது.

வேலுடையான்பட்டு

நெய்வேலியில் வேலுடையான்பட்டு சுப்பிரமணியசுவாமி கோவிலில் பங்குனி உத்திர விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலையில் சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலையில் வெவ்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் நடந்தது. மேலும் திருக்கல்யாண உற்சவமும், வாண வேடிக்கையுடன் முத்துபல்லக்கில் வீதி உலாவும் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நேற்று 3 ஆயிரம் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து சுப்பிரமணியசாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று(புதன்கிழமை) தெப்ப உற்சவம் நடக்கிறது.


Next Story