கடலூர் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா


கடலூர் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:45 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

கடலூர்

கடலூர் அடுத்த சின்னகாரைக்காடு கிராமத்தில் சிவசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் 127-ம் ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் காவடிகளுக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் காவடிகள் மற்றும் பால்குடங்களை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடா்ந்து சிவசுப்பிரமணியசாமிக்கு பால் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகன் அருள்பாலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.

காட்டுமன்னார்கோவில்

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளியங்கால் பாலத்தின் அருகில் ஊசி முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஊசி முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

திட்டக்குடி

திட்டக்குடி பெரியார் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசாமி, ஸ்ரீமுஷ்ணம் பழனியாண்டவர், குறிஞ்சிப்பாடி சுப்பிரமணியசாமி ஆகிய கோவில்களில் பங்குனி உத்திரத்தையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் காவடி, பால்குடங்களை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

புதுச்சத்திரம்

புதுச்சத்திரம் அருகே உள்ள திருச்சோபுரம் கிராமத்தில் திருச்சோபுரநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தேரில் சிறப்பு அலங்காரத்தில் திருச்சோபுரநாதர் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story