காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்


காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
x

காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்

பங்குனி உத்திர திருக்கல்யாண விழா

பஞ்ச பூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற சிவன் ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண விழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அன்று முதல் காலை மாலை என வெவ்வேறு வாகனங்களில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலியோடு எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து காட்சி அளித்து வந்தார்.

இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று அதிகாலை திருக்கல்யாண திருவிழா ஏகாம்பரநாதர் திருக்கோவில் வளாகத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்றது.

திருக்கல்யாண திருவிழாவையொட்டி ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலிக்கும் அபிஷேக ஆராதனைகளானது செய்யப்பட்டு மல்லிகைப்பூ, ரோஜா பூ, மனோரஞ்சித பூ, குருவி வேர், ஏலக்காய் மாலைகள் அணிவித்து மணமக்களாக ஆயிரம் கால் மண்டபத்தின் அருகே எழுந்தருளி பின்னர் பிரமாண்ட திருக்குடைகள் ராஜநடையுடன் அழகழகாய் அசைந்தாடியபடி மாலை மாற்றும் நிகழ்வானது மும்முறை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க சிவச்சாரியார் மாங்கல்யத்தை கட்டி திருக்கல்யாண வைபவமானது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவாய நம முழக்கங்களுக்கிடையே நடைபெற்றது.

50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம்

அப்போது 50-க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

பின்னர் ஏகாம்பரநாதரும், ஏலவார்குழலியும் மங்கள வாத்திய இசைகள் முழங்கியபடி உற்சவ மண்டபத்திற்கு வந்திருந்து ஏகாம்பரநாதர் தங்க ரிஷப வாகனத்திலும் ஏலவார்குழலி சப்பரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

திருக்கல்யாண வைபவம் முடிவுற்று கோபுர தரிசனம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோபுர வாயிற் பகுதியில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். அதே போல் நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஏகாம்பரநாதரையும், ஏலவார்குழலியையும் வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து நேற்று காலை கந்தப்பொடி திருவிழா, இரவு நூதன வெள்ளி உருத்திரகோடி விமானம், இன்று பகல் புருஷாமிருக வாகனம், இரவு பஞ்சமூர்த்திகள் வீதியுலா, நாளை பகல் சந்திரசேகரர் வெள்ளி இடத்தில் எழுந்தருளி சர்வ தீர்த்தத்தில் தீர்த்தவாரி, உற்சவ சாந்தி சிறப்பு, இரவு யானை வாகனத்துடன் கொடி இறக்கம் நடைபெறுகிறது. 8-ந்தேதி பகல் 108 கலசாபிஷேகம், சங்காபிஷேகம், இரவு பொன் விமானத்தில் திருமுறை உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் வேல்மோகன், ஆன்மிக பிரமுகர் முத்தியால்பேட்டை ஆர்.வீ.ரஞ்சித்குமார், காஞ்சீபுரம் மாநகராட்சி துணை மேயர் குமரகுருபரன், ஓட்டல் அதிபர் டி.எம்.ரவி, மாவட்ட பா.ஜ.க. நிர்வாகி செந்தில் முதலியார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story