சாலையில் உலா வந்த கரடியால் பீதி
சாலையில் உலா வந்த கரடியால் பீதி
கோத்தகிரி
கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலை பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை விளங்குகிறது. இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணிக்கு கரடி ஒன்று அந்த சாலை வழியாக சாவகாசமாக நடந்து சென்றது. இதனால் அந்த சாலை வழியாக நடந்து சென்றவர்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த காட்சி அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. ஏற்கனவே இதே பகுதியில் கருஞ்சிறுத்தைகள், சிறுத்தைகள், காட்டெருமை, முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். எனவே வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறைக்கு, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-------------------------