பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்


பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x

கலவை மற்றும் கூடலூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவது குறித்து அமைச்சர் காந்தி ஆலோசனை நடத்தினார்.

ராணிப்பேட்டை

ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவது குறித்து ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

சிறப்பு மருத்துவ முகாம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒரு வருடம் நடத்த முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அந்த வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஏழை, எளிய பொதுமக்கள் மற்றும் தாய்மார்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தி, சிகிச்சை அளிக்கும் வகையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

நமது மாவட்டத்தில் கலவை பேரூராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சோளிங்கர் ஒன்றியம் கூடலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இந்த சிறப்பு மருத்துவ முகாம் வருகிற 24-ந் தேதி நடத்திட ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ஊராட்சிமன்ற தலைவர்கள்

இதற்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும். அதேபோல ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு தலைவர்கள் இப்பணியில் இணைந்து செயல்படுவார்கள். தேவைப்படும் அனைத்து உதவிகளும் நானே செய்து கொடுக்கின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, மருத்துவ பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், மாவட்ட ஊராட்சிகுழு துணைத் தலைவர் நாகராஜு மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை அமைச்சர் ஆர்.காந்தி நட்டார்.


Next Story