தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு கீழே வரும் சிறுத்தை


தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு கீழே வரும் சிறுத்தை
x
தினத்தந்தி 20 Jun 2023 10:40 AM GMT (Updated: 20 Jun 2023 12:36 PM GMT)

தண்ணீருக்காக வனப்பகுதியை விட்டு கீழே வரும் சிறுத்தை

திருப்பூர்

காங்கயம்

ஊதியூர் வனப்பகுதியை விட்டு தண்ணீருக்காக கீழே வரும் சிறுத்தை தோட்டத்தில் உள்ள கால்நடைகளை தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதத்திற்கு முன்பு ஊதியூர் வனப்பகுதிக்கு வந்த ஒரு சிறுத்தை பதுங்கி மலையடிவாரப் பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு புகுந்து அங்கிருந்த ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடி வந்தது. இதையடுத்து காங்கயம் வனத்துறையினர் ஊதியூர் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக எச்சரிக்கை பதாகைகள் பல்வேறு இடங்களில் வைத்து சிறுத்தையை கண்காணித்து வந்தனர். மேலும் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், ட்ரோன்கள் கேமராக்கள் உள்ளிட்டவைகளை வைத்தும் தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால் சிறுத்தை போக்கு காட்டும் விதமாக கூண்டுகளில் சிக்காமல் இதுவரை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. இந்தநிலையில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சிறுத்தையை பார்த்ததாக தகவல் தெரிவித்து வந்தனர். தகவல் தெரிவித்த இடங்களுக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் பட்டியில் அடைத்து வைத்திருந்த ஆட்டுக்குட்டிகள் தொடர்ந்து மாயமாகி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று கால்தடங்களை ஆய்வு செய்து சிறுத்தைவேட்டையாடியதாக உறுதிப்படுத்தினர். இதனால் அச்சம் அடைந்த ஊதியூர் பகுதி மக்கள் சிறுத்தையின் தொடர் வேட்டையை கண்காணிக்க தாங்களாகவே முன்வந்து அவர்களது தோட்டத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வந்தனர்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவு 12 மணியளவில் ஊதியூர் மலையடிவார பகுதியில் உள்ள விவசாயி கார்த்தி என்பவரது தோட்டத்தில் புகுந்த சிறுத்தை மெதுவாக நடந்து சென்று இரை தேடிய காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து இரவு நேரங்களில் சிறுத்தை, மான் போன்ற வன விலங்குகள் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு கீழே வந்து தோட்டத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் குடித்து செல்வதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து மலையடிவார பகுதியில் உள்ள விவசாயிகள் கூறியதாவது: வனப்பகுதியியலே 100-க்கும் மேற்பட்ட மான்கள் உள்ளது. சிறுத்தை உணவுக்காக அதிக அளவில் கீழே வருவதில்லை. தண்ணீருக்காக இரவு நேரங்களில் மலையடிவார பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு வருகிறது. அப்படி வரும் வேலையில் தோட்டத்தில் உள்ள கால்நடைகளை தாக்குகிறது. எனவே வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பி வைத்தால் சிறுத்தை அதிக அளவில் கீழே வருவதையும், கால்நடைகளை தாக்குவதையும் தடுக்கலாம். எனவே வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வனத்துறையினர் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுத்து, தண்ணீர் உள்ள பகுதிகளில் கூண்டுகள் வைத்து சிறுத்தையை பிடிக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-


Next Story