பி.ஏ.பி. வாய்க்காலில் செல்லும் கழிவுநீர்
காங்கயம், ஜூன்.8-
காங்கயம் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி.வாய்க்கால்
திருமூர்த்தி அணையில் இருந்து திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் பரம்பிக்குளம் ஆழியாறு கால்வாய் வெள்ளகோவில் வரை அமைந்துள்ளது. இதில் காங்கயத்தில் இருந்து பிரியும் வெள்ளகோவில் கிளை வாய்க்கால் 27 கிலோமீட்டர் நீளத்திற்கு இந்த வாய்க்கால் ஆனது பாசன நிலங்களுக்கு நீரை கொண்டு செல்கிறது.
இந்த நிலையில் காங்கயம் அருகே பழையகோட்டை சாலையில் உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் உள்ள இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வர்த்தக நிறுவன கட்டிடங்களில் இருந்து வெளியாகும் கழிவுநீர் பி.ஏ.பி. வாய்க்காலில் சென்று கொண்டிருப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் போதும் கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, கழிவுநீர் வாய்க்காலில் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை
இது குறித்து காங்கயம் பி.ஏ.பி. வாய்க்கால் உதவி பொறியாளர் பாஸ்கரன் கூறும்போது "வாய்க்காலில் கழிவுநீர் விடும் குடியிருப்புகளுக்கு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து தொடர்ந்து கழிவுநீர் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.