காகித ஆலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
காகித ஆலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் மாவட்டம், திருக்காடுதுறை அருகே ஆலமரத்து மேடு பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன்(வயது 75). இவரது மகன் ரவி(46). இவர் புகழூர் காகித ஆலையில் நிரந்தர தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் விரக்தியில் இருந்த ரவி கால்நடைகளுக்கு புல் அறுத்து வருவதாக கூறி அருகாமையில் உள்ள சொரும்பாறை தோட்டத்திற்கு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரம் ஆகியும் ரவி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை பக்கத்து வீட்டுக்காரரான ராமசாமி என்பவரை சென்று தேடிப்பார்த்து வருமாறு கூறியுள்ளார். அப்போது ராமசாமி சொரும்பாறை தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது தோட்டத்தில் உள்ள வேப்பமரத்தில் ரவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைப் பார்த்த ராமசாமி இதுகுறித்து கருப்பண்ணனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு விரைந்து சென்ற கருப்பண்ணன் உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து ரவியை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கருப்பண்ணன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ரவியின் உடலை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.