காகித ஆலை ஊழியர் சாவு: அரசு மருத்துவமனை முற்றுகை


காகித ஆலை ஊழியர் சாவு: அரசு மருத்துவமனை முற்றுகை
x

காகித ஆலை ஊழியர் திடீரென இறந்த சம்பவத்தால் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையை உறவினர்கள், தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

கரூர்

காகித ஆலை ஊழியர்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் அருண் சுதன் (வயது 32). இவருக்கும் கரூர் மாவட்டம், செம்படாபாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 வயதில் சஹானா என் பெண் குழந்தை உள்ளார். அருண் சுதன் புகழூர் காகித ஆலையில் கிரைன் ஆபரேட்டராக ேவலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்ற அருண்சுதனுக்கு இரவு 11 மணி அளவில் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காகித ஆலையில் உள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பினார்.

சாவு

அதிகாலை 4 மணிக்கு தண்ணீர் குடிக்க வந்தபோது அருண் சுதன் காகித ஆலையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு மீண்டும் காகித ஆலையில் முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்ைச அளிக்கப்பட்டு, பின்னா் அவர் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அருண் சுதனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அருண் சுதனின் உடலை கைப்பற்றி பிரே பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சவக்கிடங்கில் வைத்தனர்.

போராட்டம்

இந்தநிலையில் அருண் சுதனை இரவு 11 மணியளவில் உடல் சரியில்லை என காகித ஆலை முதல் உதவி சிகிச்சை மையத்திற்கு சென்ற பொழுது முறையாக பரிசோதித்து பார்த்திருந்தால் அவரது உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்றும், அவருடைய இறப்பிற்கு காகித ஆலை நிர்வாகத்தின் டாக்டரின் அலட்சியப் போக்கே காரணம் எனவும் இது குறித்து டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இறந்தவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு காகித ஆலையில் நிரந்தர வேலை வழங்கக்கோரியும், இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரண உதவியும் வழங்க வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என கூறி அவரது உறவினர்கள் மற்றும் காகித ஆலை தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலாயுதம் பாளையம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த புகழூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், புகழூர் தாசில்தார் முருகன், அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், புகழூர் காகித ஆலை செயல் இயக்குனர் கிருஷ்ணன், சீனியர் மேலாளர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் அருண் சுதன் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு படிப்பின் அடிப்படையில் வரும் ஒரு மாதத்திற்குள் நிரந்தர வேலை தருவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அருண் சுதன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான திருவையாறுக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.


Next Story