பரமக்குடியில் கைதி இறந்த வழக்கு:3 போலீசார் மீதான விசாரணை தொடங்கியது


பரமக்குடியில் கைதி இறந்த வழக்கு:3 போலீசார் மீதான விசாரணை தொடங்கியது
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடியில் போலீஸ் நிலையத்தில் இருந்த கைதி மர்மமான முறையில் இறந்த வழக்கில் கைதாகி உள்ள 3 போலீசார் தொடர்பான வழக்கு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தொடங்கியது.

ராமநாதபுரம்

பரமக்குடியில் போலீஸ் நிலையத்தில் இருந்த கைதி மர்மமான முறையில் இறந்த வழக்கில் கைதாகி உள்ள 3 போலீசார் தொடர்பான வழக்கு மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தொடங்கியது.

கைதி சாவு

மதுரையை சேர்ந்த ராமானுஜன் மகன் வெங்கடேசன் (வயது 26). இவர் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி பரமக்குடி எமனேசுவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டார். அங்கு போலீசார் தாக்கியதில் இவர் இறந்ததாக புகார் கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி (65) உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் ஓய்வு பெற்ற முனியசாமியை முதுகுளத்தூர் அருகே உள்ள ஏனாதி பகுதியில் வைத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறந்தார்.

விசாரணை தொடங்கியது

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் பரமக்குடி ஞானசேகரன், முதுகுளத்தூர் போலீஸ் தனிப்பிரிவு காவலர் மஞ்சூர் கிருஷ்ணவேல் மற்றும் சாயல்குடி போலீஸ் தனிப்பிரிவு காவலர் ஆப்பநாடு கோதண்டராமன் ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்கின் ஆதாரங்களை திரட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் ரகசிய வாக்குமூலம் பெற்று ராமநாதபுரம் நீதித்துறை நடுவர் எண்.2 கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து பரமக்குடி காவல்நிலைய கைதி மர்ம மரணம் தொடர்பான வழக்கு நீதித்துறை நடுவர் கோர்ட்டில் இருந்து மாவட்ட முதன்மை கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி கஜரா ஜிஜி முன்னிலையில் வந்தது. வழக்கினை விசாரணை செய்த நீதிபதி வரும் ஏப்ரல் 13-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story