பரமத்தி அருகே இருதரப்பினர் மோதல்; 3 பேர் மீது வழக்கு
பரமத்தி அருகே இருதரப்பினர் மோதல்; 3 பேர் மீது வழக்கு
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே உள்ள குச்சிபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் பிரபாகரன் (வயது 23). பரமத்தி அருகே உள்ள சாலப்பாளையத்தை சேர்ந்த சிவகுமார் மகன் கவுரிசங்கர் (23). இருவரும் பரமத்தி அருகே ஜங்கமநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு உணவு விடுதிக்கு அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஜங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (30) என்பவர் கடைக்கு அருகில் நிறுத்திய ஆட்டோவை எடுக்குமாறு கூறினார்.
அப்போது பிரபாகரன், கவுரிசங்கர் ஆகியோர் 2 பேரும் சாப்பிட்டு விட்டு ஆட்டோவை எடுத்து செல்வதாக கூறினர். இதனால் கோபம் அடைந்த ஆனந்தகுமார் அங்கு கிடந்த கல்லை எடுத்து ஆட்டோ மீது போட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆனந்தகுமார் மற்றும் பிரபாகரன், கவுரிசங்கர் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டு தாக்கி கொண்டனர். இதில பிரபாகரன், கவுரிசங்கர் மற்றும் ஆனந்தகுமாருக்கு காயம் ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து பரமத்தி போலீசார் இருதரப்பினரான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.