பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி


பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி
x

ஆடிப்பெருக்கையொட்டி பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் பரிசல் போட்டி மற்றும் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

பரிசல் போட்டி

பரமத்திவேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி ஆற்றில் ஆடிப்பெருக்கையொட்டி பரிசல் போட்டி மற்றும் மோட்ச தீபம் நேற்று மாலை நடைபெற்றது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா தொற்று மற்றும் காவிரியில் வெள்ளப்பெருக்கு காரணமாக பரிசல் போட்டி ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் கோவில் நிர்வாகத்தினர் மட்டும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவிரியில் மோட்ச தீபம் விடப்பட்டது.

இந்தநிலையில் இந்த ஆண்டு காவிரியில் குளிப்பதற்கு போதிய அளவு தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், பாதுகாப்பாக பக்தர்கள் நீராடவும், பரிசல் போட்டி மற்றும் சிறு கடைகள் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து நேற்று மாலை வேலூர் சோழன் பாய்ஸ் ஏ. இயக்க மீனவர் சங்கம் சார்பில் 26-வது தொடர் பரிசல் போட்டி நடைபெற்றது. வேலூர் சிவன் கோவில் காவிரி கரையில் இருந்து மறு கரையில் உள்ள கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி கரைக்கு சென்று மீண்டும் சிவன் கோவில் பகுதியை வந்தடைந்தது. இதில் வேலூரை சேர்ந்த ராஜா முதல் பரிசையும், கணேசன் 2-வது பரிசையும், விஸ்வா 3-வது பரிசையும் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி பரிசு வழங்கி பாராட்டினார்.

மோட்ச தீபம்

அதனை தொடர்ந்து விவசாயம் செழிக்கவும், காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் வகையிலும் காவிரி ஆற்றில் மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக காசி விஸ்வநாதர் கோவிலில் மோட்ச தீபத்திற்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பரிசல் மூலம் காவிரி ஆற்றின் மத்திய பகுதிக்கு சென்று மோட்ச தீபம் விடப்பட்டது. மோட்ச தீபத்தை காண கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் காவிரி கரை, நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரட்டை காவிரி பாலம் மற்றும் காசி விஸ்வநாதர் காவிரி கரையில் இருந்து நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் ஈரோடு மாவட்ட பகுதிகளில் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் மோட்ச தீபத்தை வழிபட்டனர்.

பாதுகாப்பு கருதி பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி தலைமையில், வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.


Next Story