பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து வெளியேறும் தண்ணீர்: பாசனம், குடிநீருக்கு பிரச்சினை இருக்காது- ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தகவல்
பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து வெளியேறும் தண்ணீரால் பாசனம், குடிநீர் பிரச்சினை இருக்காது என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து வெளியேறும் தண்ணீரால் பாசனம், குடிநீர் பிரச்சினை இருக்காது என்று ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பரம்பிக்குளம் அணை
பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 17.8 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால் அணை முழு கொள்ளளவை எட்டியது. மேலும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து உபரிநீரும் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி மதகு உடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
இதன் காரணமாக தொடர்ந்து 7-வது நாளாக நேற்று தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அணையில் மதகு மட்டம் வரை சுமார் 6 டி.எம்.சி. தண்ணீர் வரை வீணாகலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்று கருதப்பட்டது.
ஆலோசனை கூட்டம்
இதன் காரணமாக பொள்ளாச்சி உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பி.ஏ.பி. அணைகளில் உள்ள தற்போதை நீர்இருப்பு, எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து, பாசனம் மற்றும் குடிநீருக்கு வழங்க வேண்டிய தண்ணீர் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் திருமூர்த்தி திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், பாசன சபை நிர்வாகிகள் கோபால், ஈஸ்வரன், நல்லதம்பி, ஜெயபால், சின்னசாமி, அருண், உடுக்கம்பாளையம் பரமசிவம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பாசனம், குடிநீர் தேவை
சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு மற்றும் பி.ஏ.பி. திட்டத்தில் உள்ள அணைகளில் தற்போதைய நீர்இருப்பு 18,912 மில்லியன் கன அடியாக உள்ளது. மேலும் கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழைக்காலத்தில் எந்த ஆண்டு குறைவாக மழை பெய்ததோ அந்த ஆண்டின் நீர்வரத்தில் 75 சதவீதம் கணக்கீடப்பட்டது. இதில் 9,690 மில்லியன் கன அடி நீர் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதை நீர்இருப்பு, எதிர்பார்க்கப்படும் நீவரத்தை சேர்த்தால் 28,602 மில்லியன் கன அடி நீர் வருகிறது.
இதற்கிடையில் திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம், 4-ம் மண்டல பாசனத்திற்கு 4 சுற்று தண்ணீர், தளி பழைய ஆயக்கட்டு மற்றும் குடிநீருக்கு சேர்த்து 15,614 மில்லியன் கன அடி தேவைப்படுகிறது.
இதேபோன்று ஆழியாறு பழைய, புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு 5389 மில்லியன் கன அடியும், கேரளாவுக்கு வழங்குவதற்கு 9058 மில்லியன் கன அடியும் தேவைப்படுகிறது. மொத்தம் 30,061 மில்லியன் கன அடி தண்ணீர் தேவைப்படும். இதனால் நீர்வரத்து, நீர்இருப்பை கணக்கீடு செய்ததில் 1459 மில்லியன் கன அடி பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்பு உள்ளதால் அந்த பற்றாக்குறையாக உள்ள தண்ணீரை சமாளிக்க முடியும். இதனால் ஆழியாறு, திருமூர்த்தி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பிரச்சினை இருக்காது. மேலும் திருமூர்த்தி அணையில் இருந்து அரசாணைப்படி தண்ணீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.