பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம்
பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது.
சென்னை,
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடந்து வருகின்றன. புதிய விமான நிலையத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனினும் பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான பூர்வாங்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் கோரியுள்ளது. பசுமை விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரெயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும்.
விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும், 2069-70 ம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெறவேண்டும் எனவும் தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.