அரசு பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
கோத்தகிரி அருகே அரசு பள்ளியில் சுகாதாரமற்ற சத்துணவு வழங்குவதாக கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே அரசு பள்ளியில் சுகாதாரமற்ற சத்துணவு வழங்குவதாக கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். அவர்கள் தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளி
கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் பாக்கிய நகரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் மதிய நேர சத்துணவு சுகாதாரமற்றதாகவும், உணவில் பூச்சிகள் இருப்பதாகவும், சுத்தமான தண்ணீரில் உணவு தயாரிக்கப்படுவது இல்லை என்று தங்களது பெற்றோர்களிடம் மாணவர்கள் கூறி உள்ளனர்.
மேலும் அவர்கள் சுகாதாரமற்ற உணவை உண்பதால் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி வந்ததாக தெரிகிறது. இதனால் வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அனுமதி வழங்க வேண்டும் என பள்ளியில் உள்ள புகார் பெட்டியில் மாணவர்கள் கையெழுத்திட்டு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று காலை பள்ளி வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டனர்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலும் அவர்கள் சத்துணவு சமைக்கும் இடத்திற்கு நேரில் சென்று தண்ணீர், சமையல் எண்ணெய், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களின் தரத்தை பார்வையிட்டனர். உணவு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக கூறி பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று கூறி வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, பாக்கிய நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தரமான கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மதிய சத்துணவு சுகாதாரமற்ற தண்ணீர், தரமற்ற பருப்பு, பூச்சிகள் உள்ள காய்கறிகள் மற்றும் காலாவதி தேதி முடிந்த சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்டு சமைக்கப்படுவதை நேரில் பார்த்தோம். மேலும் சத்துணவு முட்டை நன்றாக வேக வைக்கபடுவதில்லை. இதனால் அதை உண்ணும் குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை என கூறி வீட்டிற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.