மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை


மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகை
x

மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேலப்பாளையம் மாநகராட்சி பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் காலாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இணையதள கோளாறு, இணையத்தின் வேகம் குறைபாடு காரணமாக தேர்வுகள் நடத்துவதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.

மேலும் ஆசிரியர்கள் 4, 5-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ற கேள்வித்தாள்களை கணினி மையங்களுக்கு சென்று பதிவிறக்கம் செய்து தேர்வு நடத்துகிறார்கள். இந்த தேர்வு நடைமுறைக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மேலப்பாளையம் ஆமீம்புரம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் பெற்றோர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறுகையில், 'மாநகராட்சி பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு காலாண்டு தேர்வு இணையதளம் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களிடம் இருக்கும் செல்போன் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்த வேண்டிய சூழல் உள்ளது. இணையதள பிரச்சினை, வேகம் குறைபாடு காரணமாக ஒரு தேர்வை 3 நாட்கள் எழுதும் அவல நிலை உள்ளது. கொரோனா காலத்தில் குழந்தைகள் ஆன்லைன் மூலம் படித்தனர். ஆனால் தற்போதும் ஆன்லைன் மூலம் படிப்பு, தேர்வை நடத்துகிறார்கள். இது மாணவர்களின் எழுத்துத்திறனை பாதிக்கும். மேலும் செல்போன் பயன்பாட்டால் கண்களும் பாதிக்கப்படும். எனவே அரசு உடனடியாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை கைவிட்டு எழுத்து தேர்வை நடத்த வேண்டும்' என்றனர்.

தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story