பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்


பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கோவில்பட்டி அருகே ஆசிரியை பணியிட மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை அனுப்பாமல் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூரை அடுத்த சிதம்பரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதாக கூறப்படுகிறது. இதையடுத்து மறுநாள் மாணவியின் தாயார், உறவினர்கள் பள்ளிக்கூடத்துக்கு சென்று, அந்த மாணவரை தாக்கினர்.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடந்தது. இதையடுத்து தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி, அறிவியல் ஆசிரியை பொன்மலர் ஆகிய 2 பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில் அறிவியல் ஆசிரியையை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி, வார்டு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் கிராம மக்கள் நேற்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் பள்ளி நுழைவுவாயில் அருகில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ராஜன், கயத்தாறு தாசில்தார் சுப்புலட்சுமி, நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது கிராம மக்கள் கூறுகையில், ''எங்கள் பள்ளிக்கூடம் கடந்த 10 ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கு அறிவியல் ஆசிரியைதான் காரணம். எனவே அவரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது'' என்று தெரிவித்தனர்.

இதையடுத்து கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைத்த கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினர்.


Next Story