தேர்வு எழுத மறுத்ததால் பெற்றோர் கண்டிப்பு: மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை


தேர்வு எழுத மறுத்ததால் பெற்றோர் கண்டிப்பு: மாடியில் இருந்து குதித்து பிளஸ்-1 மாணவர் தற்கொலை
x

தேர்வு எழுத மறுத்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

சென்னை தியாகராயநகர் தாமஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர், அரசு வேளாண்மை துறையில் பணியாற்றி வருகிறார். இவருடன் மனைவி சிமி மற்றும் மகன் ஹரிஷ் (வயது 15) ஆகியோர் அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். ஹரிஷ், கோபாலபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

ஹரிஷ், படிப்பில் தொடர்ந்து நாட்டமில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் படித்து வந்த பள்ளியில் தேர்வு நடைபெற்று வந்தது. இதற்கிடையே நேற்று காலை ஹரிஷ் பள்ளிக்கு தேர்வு எழுத செல்லாமல் வீட்டில் இருந்ததாக கூறி அவரை, அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. மேலும் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதுமாறும் கூறியதால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபம் அடைந்த ஹரிஷ், வீட்டின் மொட்டை மாடிக்கு விரைந்து சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக ஹரிசை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஹரிஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story