மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டம்

தேக்காட்டூரில் புதிய கட்டிடம் கட்டித்தர கோரி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய கட்டிடம் கட்டிதரக்கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், தேக்காட்டூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. பள்ளி கட்டிடங்களை சீரமைத்து தர வேண்டும் அல்லது கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று பலமுறை அந்த பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை கொண்டு பள்ளி கட்டிடத்தில் மேற்கூைரயில் உள்ள ஓடுகளை பிரித்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம்
இதனை தடுத்து நிறுத்திய அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றியம் சார்பில் இடிந்து விடும் தருவாயில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது இடித்துவிட்டு உடனடியாக புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கூறி நேற்று தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள், கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்கள் அங்குள்ள கலையரங்கத்தில் அமர வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் பெற்றோர்கள் மற்றும் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கட்டிடத்தை இடித்து அகற்ற அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உடனடியாக கட்டிடம் கட்டிக் கொடுக்க இயலாது. ஆகவே அருகிலுள்ள சமுதாயக்கூடம் அல்லது கலையரங்கத்தில் குழந்தைகளை வைத்து பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினார்கள். ஆனால் பொதுமக்கள் புதியதாக பள்ளி கட்டிடம் கட்டி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து தற்காலிகமாக ஓட்டு கட்டிடம் சீர் செய்யப்பட்டு அதில் வகுப்பறை நடத்த அதிகாரிகள் கூறினார்கள். இதையடுத்து பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






