போலீஸ்காரரின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு 16 ஆண்டுகளாக அலையும் பெற்றோர் அரசு உதவ கோரிக்கை


போலீஸ்காரரின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு 16 ஆண்டுகளாக அலையும் பெற்றோர் அரசு உதவ கோரிக்கை
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 5:24 PM IST)
t-max-icont-min-icon

போலீஸ்காரரின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு 16 ஆண்டுகளாக பெற்றோர் அலைந்து வருகிறார்கள். தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிவகங்கை

மானாமதுரை,

போலீஸ்காரரின் இறப்புக்கு இழப்பீடு கேட்டு 16 ஆண்டுகளாக பெற்றோர் அலைந்து வருகிறார்கள். தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இழப்பீட்டு தொகை

மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா (வயது 80). இவரது மனைவி இருளாயி (70). இவர்களுக்கு ஏற்கனவே 3 மகன்கள் மற்றும் 2 மகள்கள் என மொத்தம் 5 பிள்ளைகள் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் கடைசி மகன் ராஜேந்திரனுக்கு மட்டும் திருமணம் ஆகாமல் இருந்தது.

பிளஸ்-2 படித்து முடித்த ராஜேந்திரன் கடந்த 2006-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் போலீஸ்காரராக சேர்ந்து முதலில் மதுரையில் பணியாற்றி விட்டு அதன் பின்னர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் பணியிலிருந்த போது கடந்த 2007-ம் ஆண்டு திடீரென உடல் நலம் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதையடுத்து பெற்றோர் கடன் வாங்கி தனது மகனின் மருத்துவ செலவுகளை கவனித்து வந்த நிலையில் திடீரென அவர் இறந்தார். அப்போது அரசின் சார்பில் எவ்வித உதவி தொகையும் ராஜேந்திரன் குடும்பத்திற்கு வழங்கப்படவில்லை.

மேலும் இறந்து போன தனது மகனுக்குரிய இழப்பீடு தொகை உள்ளிட்ட நிலுவை தொகை பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அப்போது இருந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உள்பட எம்.எல்.ஏ, அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு வழங்கினர்.

உதவ வேண்டும்

ஆனால் எவ்வித தொகையும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இதையடுத்து தற்போது வயதான காரணத்தினால் கருப்பையா மற்றும் இருளாயி தம்பதியை மற்ற பிள்ளைகளும் கவனிக்காமல் விட்டு விட்டனர். அவர்கள் தற்போது அங்குள்ள ஒரு சின்ன பாழடைந்த ஓட்டு வீட்டில் தங்கியிருந்து அன்றாட சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்து வருவதாக கண்ணீருடன் கூறினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்களது இறந்து போன மகனிற்கு சேர வேண்டிய இழப்பீட்டு தொகை மற்றும் நிலுவை தொகையை கேட்டு கடந்த 16 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள், உயர் அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களிடம் மனுகொடுத்தும் இன்று வரை எவ்வித பயனும் இல்லை. தற்போது மிகவும் நலிவுற்ற நிலையில் உள்ள எங்களை பாதுகாக்க அரசு உதவ வேண்டும் என்றனர்.


Next Story