பார்த்தீனியம் செடிகளால் வனவிலங்குகளுக்கு ஆபத்து
முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளால் வனவிலங்குகளுக்கு ஆபத்து நிலவுகிறது. இதை கட்டுப்படுத்த வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்
முதுமலை வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ள பார்த்தீனியம் செடிகளால் வனவிலங்குகளுக்கு ஆபத்து நிலவுகிறது. இதை கட்டுப்படுத்த வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முதுமலை
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானைகள், புலிகள், கரடிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. மேலும் சந்தனம், தேக்கு உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்களும் காணப்படுகிறது.
கோடை காலத்தில் வறட்சியால் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் போன்ற தாவர உண்ணிகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படுகிறது. தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில், முதுமலை வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது. அதற்கு இணையாக வனவிலங்குகள் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும் உன்னி செடிகளும் அடர்ந்து வளர்ந்து வருகிறது.
பார்த்தீனியம் செடிகள்
மேலும் முதுமலை வனப்பகுதி பார்த்தீனியம் செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு காணப்படுகிறது. இதனால் எங்கு திரும்பி பார்த்தாலும் பார்த்தினீயமாக உள்ளது.
இதனால் காட்டுயானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. தொடர்ந்து வனவிலங்குகளின் உடல் நலன் பாதிக்கும் அபாயமும் உள்ளது. இதனால் பார்த்தீனியம் செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டுப்படுத்த நடவடிக்கை
இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-
பார்த்தீனியம் செடிகள் மனிதர்களுக்கு சுவாச கோளாறு, தோல் அரிப்பு உள்பட பல்வேறு நோய்களை ஏற்படுத்தக்கூடியது. மேலும் வனவிலங்குகளுக்கும் கேடு விளைவிக்க கூடியது. இதனால் மண்ணின் வளமும் பாதிக்கப்படும். இந்த தாவரங்கள் பூத்து காற்றின் மூலம் பல இடங்களுக்கு பரவும் தன்மை உடையது. பூக்கும் பருவம் வருவதற்கு முன்பே வேருடன் பிடுங்கி தீ வைத்து எரிக்க வேண்டும்.
இல்லையெனில் உப்பு கரைசல் கொண்ட நீரை தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இந்த தாவரங்கள் முதுமலை வனம் முழுவதும் ஆக்கிரமித்து உள்ளதால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்படும். மேலும் உடல் நலனும் பாதிக்கப்படும். எனவே வனத்துறையினர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.