பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமத்தில் புதிதாக மதுபான கடை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் புதிய மதுபான கடைகள் திறக்கக்கூடாது என பல்வேறு தரப்பட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனை அடுத்து மதுபான கடை திறப்பது அவ்வப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடையை திறந்து விற்பனையை துவங்கினர். இதனை அறிந்த பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு மூடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 2 பெட்டி மது பாட்டில்களை வெளியில் எடுத்து வைக்கச்சொல்லி கதவை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போராட்டம் செய்தவர்களை சமாதானம் செய்து அனுப்பிய நிலையில் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி டாஸ்மாக் மோற்பார்வையாளர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் பா.ம.க.வினர் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தை பா.ம.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லாவிடம் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் பா.ம.க. வக்கீல் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் மதுபான கடையை திறக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதித்தது. இதனை வரவேற்று ஜெயங்கொண்டம் நகர பா.ம.க. சார்பில் நகர செயலாளர் பரசுராமன் தலைமையில், நகரத் தலைவர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Next Story