பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு
பெரியார் சிலைக்கு கட்சியினர் மாலை அணிவித்தனர்.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா நேற்று சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரியலூரில் பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சின்னப்பா தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தி.மு.க. சார்பில் நகர செயலாளர் முருகேசன் மற்றும் கட்சியினர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கினர். திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு தலைமையில் அந்த கட்சியினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்கள். மேலும் வாலாஜா நகரம், வாரணாசி, சமத்துவபுரம், செந்துறை சாலையில் உள்ள பெரியார் சிலைகளுக்கும் மாலை அணிவித்து கட்சி கொடி ஏற்றினார்கள்.
ஜெயங்கொண்டத்தில் பெரியார் சிலைக்கு நகர தி.மு.க. செயலாளர் வெ.கொ.கருணாநிதி தலைமையில் க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சமூக நீதிநாள் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர். இதில் தி.மு.க. நிர்வாகிகள், திராவிடர் கழக மண்டல தலைவர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் நகர்மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் மாலை அணிவித்தனர். இதில் சட்டமன்ற தொகுதி செயலாளர் இலக்கியதாசன், நிர்வாகி இளையபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் கதிர்வளவன் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.