செல்போனை பறித்ததாக டிக்கெட் பரிசோதகர் மீது பயணி புகார்


செல்போனை பறித்ததாக டிக்கெட் பரிசோதகர் மீது பயணி புகார்
x

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்போனை பறித்ததாக டிக்கெட் பரிசோதகர் மீது பயணி புகார் கொடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 48). இவர் நேற்று முன்தினம் சேலம் செல்வதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்திருந்தார். இந்தநிலையில் கோபிநாத் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு தாமதமாக சென்றதால் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு விட்டது.இதனையடுத்து திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சேலத்திற்கு செல்வதற்காக எக்ஸ்பிரஸ் டிக்கெட் எடுத்தார். பின்னர் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பி-2 ஏ.சி. பெட்டியின் டிக்கெட் பரிசோதகர் பிரபாகரன் என்பவரிடம் கோபிநாத் இருக்கை கேட்டு அமர்ந்தார்.

ரெயில் புறப்பட்டதும் பரிசோதகர் டிக்கெட் குறித்து கேட்ட போது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட்டை காட்டி ரெயிலை தவறவிட்டதால் தங்களிடம் ஏற்கனவே அனுமதி பெற்று அமர்ந்ததாக கோபிநாத் கூறினார். அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்தடைந்ததும் கோபிநாத் இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பிரபாகரன் தன்னிடம் கூடுதலாக பணம் கேட்டு செல்போனை பறித்து அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி புகார் அளித்தார்.

அதன்பேரில் அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகள் டிக்கெட் பரிசோதகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story